அரசு பள்ளிகளில் படித்து `நீட்' தேர்வில் வெற்றி பெற்ற 15 மாணவர்களுக்கு ரூ.2¼ லட்சம் மருத்துவ உபகரணங்கள்

அரசுப்பள்ளிகளில் படித்து நீட்தேர்வில் வெற்றிபெற்ற 15 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.

Update: 2022-02-07 18:37 GMT
கரூர்
கரூர்
மருத்துவ உபகரணங்கள்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அரசுப்பள்ளிகளில் படித்து, நடைபெற்று முடிந்த நீட்தேர்வில் வெற்றிபெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலாம் ஆண்டிற்கான புத்தகங்களையும், மருத்துவ உபகரணங்களையும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கி பாராட்டினார். நடைபெற்று முடிந்த நீட்தேர்வில், அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் தேர்ச்சி பெற்று மருத்துவப்படிப்புக்கு தகுதிபெற்றுள்ளனர். 
அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ம.சின்னதுரை, தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் வெ.சிவனேசன், கடவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரா.ஆர்த்தி, சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ப.சா.அகல்திகா, குளித்தலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கு.நர்மதா ஆகிய 5 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு கோயம்புத்தூர், திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
15 மாணவ, மாணவிகளுக்கு
அதேபோல தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜா.முர்சிதபானு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ந.நந்தினி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ம.புவனேஸ்வரி, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கொ.சந்தியா, சேலத்தை சேர்ந்த கோ.தமிழ்ச்செல்வி, ச.கோவிந்தராஜ், திருவள்ளூர் மு.சகானா பர்வீன், கோயம்புத்தூர் அ.ஆப்ரின்ஜகான், ஈரோடு க.தீட்சித், நாகப்பட்டினம் பு.பாலகுமாரன் ஆகிய 10 மாணவ, மாணவிகளுக்கும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்லாது, அரசுப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் 10 நபர்களுக்கும் என மொத்தம் 15 மாணவ, மாணவிகளுக்கும் முதலாம் ஆண்டிற்கு தேவையான புத்தகங்கள், மருத்துவ உபகரணங்களை கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் பிரபுசங்கர் வழங்கி வாழ்த்தினார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்டெதஸ்கோப்களை மாணவ, மாணவிகளுக்கு கழுத்தில் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சேவை தன்னலமற்றதாக...
இதில் கலெக்டர் பேசுகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த புத்தகங்களும், மருத்துவ உபகரணங்களும் உங்களின் தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும், நீங்கள்பெற்றுள்ள வெற்றிக்கும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு என்பது சேவைக்கானது. மருத்துவத்தை படித்தும், கற்றுக்கொண்டும் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் எந்த உயரத்திற்குச் சென்றாலும், கடந்த காலத்தில் நம்மை உயர்த்திவிட்ட ஏணியாக இருந்தவர்களை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. எதிர்காலத்தில் நல்ல மருத்துவர், மனிதநேயமிக்க மருத்துவர் என்று பெயரெடுக்கும் வகையில் உங்களது சேவை தன்னலமற்றதாக, ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கானதாக அமைய வேண்டும், என்றார். 
மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய புத்தகங்களை எடுத்துச்செல்ல ஏதுவாக அனைவருக்கும் மஞ்சள் பைகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, மருத்துவ மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கி அனைவருடனும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துச்செல்வம், முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் தெய்வநாதன், நந்தகுமார் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்