புதிய மின்மாற்றியில் தளவாட பொருட்கள், தாமிர கம்பிகள் திருட்டு
விழுப்புரம் அருகே புதிய மின்மாற்றியில் தளவாட பொருட்கள், தாமிர கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே சூரப்பட்டில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் மெயின்ரோட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிய மின்மாற்றி ஒன்றை பொருத்தும் பணியில் மின்வாரிய துறையினர் ஈடுபட்டனர். அங்கு புதிய மின்மாற்றி நடப்பட்ட நிலையில் அதிலிருந்து உயர் மின்னழுத்த பாதைக்குரிய லைன் கம்பி ஏதும் இணைக்கப்படவில்லை. அதுபோல் மின்மாற்றிக்கு மின்சாரமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், அந்த மின்மாற்றியில் ஏறி அதிலிருந்த மின்வாரிய தளவாட பொருட்கள், மின்மாற்றியின் உதிரிபாகங்கள் மற்றும் 80 கிலோ தாமிர கம்பிகள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மின்வாரியத்துறையினர், கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய தளவாட பொருட்கள் மற்றும் தாமிர கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.