வேட்பாளர்கள் மனு தவறாக தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை. வேலூர் கலெக்டர் பேட்டி
வேட்பாளர்கள் மனு தவறாக தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர்
வேட்பாளர்கள் மனு தவறாக தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி (தேர்தல்), வேலூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் பொறுப்பு அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது பற்றியும், கொரோனா தொற்று வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் பணிகளை மேற்கொள்வது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பதற்றமான வாக்குச்சாவடிகள்
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகள் மீண்டும் ஆய்வு செய்யப்படும். அதன்பின்னர் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து இறுதிமுடிவு எடுக்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும் அங்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.
பாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்
வாக்குப்பதிவு தினத்தன்று 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்தது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. மனு தள்ளுபடி செய்தது தொடர்பாக தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களிடம் அறிக்கை பெறப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மனு தவறாக தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.