திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தேசிய வேலை உறுதி அளிப்பு திட்ட பயனாளிகளின் வருகை பதிவு காலை 7.30 மணிக்கு செய்வதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார்.
அப்போது விவசாயிகள் கையில் ெகடிகாரம் மற்றும் விவசாய உபகரணங்களுடன் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது வாக்கடை புருசோத்தமன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொள்வது போன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் உள்ள பயனாளிகள் வருகைப்பதிவேடு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தற்போது தினமும் காலை 9.30 மணிக்கு வருகை பதிவு செய்து வந்த நிலை மாறி காலை 7.30 மணிக்கு இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் குடும்பத்தில் வேலைகள், விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே பழைய நடைமுறைபடி புதன்கிழமை நிர்வாக அனுமதியும், தினசரி காலை 9.30 மணிக்கு இணையதள பதிவும் செய்து பணி வழங்க வேண்டும் என்றார்.
மேலும் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்.
விவசாயிகள் நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.