திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி, 3 பேரூராட்சிகளில் 798 பேர் போட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 798 பேர் போட்டியிடுகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 798 பேர் போட்டியிடுகின்றனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள 126 வார்டுகளுக்கும், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளில் உள்ள 45 வார்டுகளுக்கும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 4-ந் தேதி முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து 5-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
ஆம்பூர் நகராட்சியில் 201 மனுக்களும், வாணியம்பாடியில் 280 மனுக்களும், திருப்பத்தூரில் 204 மனுக்களும், ஜோலார்பேட்டையில் 114 மனுக்களும், ஆலங்காயம் பேரூராட்சியில் 62 மனுக்களும், உதயேந்திரத்தில் 64 மனுக்களும், நாட்டறம்பள்ளியில் 71 மனுக்களும் என மொத்தம் 996 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 46 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று 198 பேர் நேற்று தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
798 பேர் போட்டி
அதன்படி ஆம்பூர் நகராட்சியில் 21 பேர் வேட்பமனுவை வாபஸ் பெற்றனர், 180 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். ஜோலார்பேட்டை நகராட்சியில் 36 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 78 பேர் களத்தில் உள்ளனர். வாணியம்பாடி நகராட்சியில் 60 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 260 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். திருப்பத்தூர் நகராட்சியில் 40 பேர் வேட்புமனு வாபஸ் பெற்றனர். 164 பேர் களத்தில் உள்ளனர்.
ஆலங்காயம் பேரூராட்சியில் 15 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 47 பேர் களத்தில் உள்ளனர். நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 14 பேர் வாபஸ் பெற்றனர். 57 பேர் போட்டியில் உள்ளனர். உதயேந்திரம் பேரூராட்சியில் 12 பேர் வேட்புமனு வாபஸ் பெற்றனர். 52 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 642 பேரும், 3 பேரூராட்சிகளில் 156 பேரும் என மொத்தம் 798 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
பிரசாரம் சூடுபிடித்தது
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கினர். இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.