தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் அடங்கிய பகுதி
சிதறி கிடக்கும் குப்பைகள்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொண்டபாளையம் பகுதியில் ரேஷன் கடை பின்பக்கம் சோளிங்கர் நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டி முழுவதும் குப்பைகள் நிரம்பி அருகிலும் சிதறிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயகிருஷ்ணன், சோளிங்கர்.
சிறுமின்விசை தொட்டி பழுது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கத்தாழம்பட்டு கிராமம் மேட்டுத்தெரு 1-வது வார்டில் உள்ள சிறுமின்விசை தொட்டி பழுதடைந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஊராட்சி தலைவர் மற்றும் செயலரிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இதனை சரி செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.ராமசாமி, கத்தாழம்பட்டு.
பாதியில் நிறுத்தப்பட்ட சிமெண்டு சாலை
பேரணாம்பட்டு தாலுகா சாத்கர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக சிமெண்டு சாலை போடும் பணி நடந்தது. ஆனால் தெருவின் இறுதிவரை சிமெண்டு சாலை போடவில்லை, மையப்பகுதி வரை மட்டுமே போடப்பட்டுள்ளது. எனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சிமெண்டு சாலையை மீண்டும் தொடங்கி தெருவின் இறுதி வரை போட வேண்டும்.
-எஸ்.லோகு, சமூக ஆர்வலர், கொண்டம்பல்லி.
வாகனங்களால் இடையூறு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பஸ் நிலையத்துக்குள் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. அங்கு கடைகள் உள்ளன. ஆனால் ஏராளமான வாகனங்கள் இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே புதிய பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவச்சந்திரன், செங்கம்.
தார் சாலை அமைக்க வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட செவ்வாத்தூர் ஊராட்சியில் உள்ள ஏரிக்கரை வழியாக தார் சாலை அமைக்க வேண்டும். தற்போதுள்ள சாலையில் மழைக்காலங்களில் நடந்தோ, இரு சக்கர வாகனங்களிேலா செல்ல சிரமமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுத்து ஏரிக்கரையின் வழியாக தார் சாலை அமைக்க வேண்டும்.
-கே.மூர்த்திகாளி, செவ்வாத்தூர்.
முடங்கிய சாலை பணி
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகருக்கு செல்ல சர்வீஸ் சாலையில் இருந்து கழிவுநீர் கால்வாயை ஒட்டி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்துள்ளனர். மேலும் அங்கு ஜல்லிக்கற்களையும் கொட்டியுள்ளனர். அதன்பின்னர் பணிகள் முடங்கி விட்டதால் அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் அங்கு புதிய சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், நேதாஜிநகர்.
வீடு, வீடாக குப்பைகள் பெறுவதில்லை
வேலூர் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை வாங்கும்படி தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் சரிவர வருவதே இல்லை. காகிதப்பட்டறை, எல்.ஐ.சி.காலனி, முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் வாரம் ஒருமுறை கூட வீடு, வீடாக குப்பைகள் வாங்குவதில்லை. அதனால் சாலையோரம் குப்பைகளை வீசும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாரத்தில் 2 நாட்களாவது வீடு, வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகள் பெற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபு, காகிதப்பட்டறை.