210 பதவியிடங்களுக்கு 935 பேர் போட்டி

விழுப்புரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 210 பதவியிடங்களுக்கு 935 பேர் போட்டியிடுகின்றனர். 314 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.

Update: 2022-02-07 17:52 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகின்றன.
இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி கடந்த 4-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 3 நகராட்சிகளின் 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 707 பேரும், 7 பேரூராட்சிகளின் 108 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 594 பேரும் ஆக மொத்தம் 210 பதவியிடங்களுக்கு 1,301 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 5-ந் தேதிநடந்தது. இதில் 210 பதவியிடங்களுக்கு 1,301 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 1,247 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 50 மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டன. 4 பேர் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

வேட்பு மனுக்கள் வாபஸ்

இதனை தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டதால் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் சிலர், அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு சென்று தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். அதுபோல் ஒரே வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பட்சத்தில் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களையும், மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் வாபஸ் பெற்றனர்.
இதன் அடிப்படையில் நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தாக்கல் செய்திருந்தவர்களில் 165 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தாக்கல் செய்திருந்தவர்களில் 149 பேரும் என மொத்தம் 314 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் ஏற்கனவே விக்கிரவாண்டி பேரூராட்சி 7 -வது வார்டில் மனுதாக்கல் செய்திருந்த தி.மு.க. வேட்பாளர் ஆனந்தி என்பவர் போட்டியின்றி வெற்றி பெற்றார். மேலும் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் 7-வது வார்டில் மனுதாக்கல் செய்திருந்த தி.மு.க. வேட்பாளர் ராயல் எஸ். எஸ் அன்பு போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார்.

935 பேர் போட்டி

இதையடுத்து மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு அவை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது. இதன் அடிப்படையில் 935 பேர் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.
இதில் 3 நகராட்சிகளின் 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 515 பேரும், 7 பேரூராட்சிகளின் 108 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 420 பேரும் என 935 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னத்தையும் தேர்தல் அதிகாரிகள் ஒதுக்கீடு செய்தனர்.

மேலும் செய்திகள்