வட்டார தேர்தல் பார்வையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது
கலெக்டர்
கடலூர்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு சாதாரண தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்தல், இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பாளர் கூட்டம் நடத்துதல், வருகிற 10-ந் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடத்துதல், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு வழங்குதல், வாக்குச்சாவடி சீட்டுகள் வினியோகம் செய்தல் மற்றும் வேட்பாளர்கள் பரப்புரையில் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கூடுதல் கலெக்டர்கள் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மல்லிகா மற்றும் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.