அரியபாக்கத்தில் பால்குடம் ஊர்வலம்
ஆத்து பாக்கம் கிருஷ்ணர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து சரஸ்வதி தேவி கோவிலை வந்தடைந்தனர்.
அரியபாக்கம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அரியபாக்கத்தில் சரஸ்வதி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வசந்த பஞ்சமி திருவிழா மற்றும் சரஸ்வதி தேவி அவதார திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோபூஜை, சரஸ்வதி யாகம் நடைபெற்றது. பின்னர் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. அதன் பின்னர் அச்சரா பியாசம் எனப்படும் குழந்தைகள் எழுதத் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தாம்பூலத் தட்டில் போடப்பட்ட நெல் மணிகளில் ‘அ' என்ற எழுத்தை குழந்தைகள் எழுதினர். பின்னர் அருகே உள்ள ஆத்து பாக்கம் கிருஷ்ணர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதேபோல் அரியபாக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து பெரும் திரளான பெண்கள் பால்குடம் ஏந்தி வான வேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு சரஸ்வதி தேவி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி சரஸ்வதி தேவிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.