ரெயிலில் அடிபட்டு வடமாநில வாலிபர் பலி
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு வடமாநில வாலிபர் இறந்தார்;
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு வடமாநில வாலிபர் இறந்தார்.
வாலிபர் பிணம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள சாலைப்புதூர் பெத்தேல் ஹோமுக்கு பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் தலை துண்டித்த நிலையில் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக, மந்தித்தோப்பு கிராம நிர்வாக அதிகாரி சுப்புராஜ், தூத்துக்குடி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன், ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
விசாரணை
தண்டவாள பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்த வாலிபர் அருகில் ஒரு பை இருந்தது. அந்த பையில் இருந்த அடையாள அட்டையில், சத்தீஸ்கார் மாநிலம் படாதாகானை சேர்ந்த பிரிட்ஜ்லால் மகன் சுக்தேவ் படேல் (வயது 27) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனைக்கொண்டு போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் சுக்தேவ் படேல், ஆசிரியர் பயிற்சி முடித்து இருப்பது தெரியவந்தது. அவர் வேலை தேடி வந்துள்ளார். பிப்ரவரி 1-ந் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி வந்்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர். இந்தநிலையில் அவர் தண்டவாளத்தின் அருகில் இறந்து கிடந்தார்.
இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ரெயிலில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
வேலை கிடைக்காத விரக்தியில் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.