ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி நண்பரின் திருமணத்துக்கு வந்த போது சோகம்

ஆண்டிப்பட்டி அருகே நண்பரின் திருமணத்துக்கு வந்த வாலிபர் வைகை ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-02-07 14:21 GMT
ஆண்டிப்பட்டி:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஆனந்தரூபன் (வயது27). தனியார் நிறுவன ஊழியர். பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் கிராமத்தில் நேற்றுமுன்தினம் இவரது நண்பரின் திருமணம் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள ஆனந்தரூபன் உள்பட நண்பர்கள் 10 பேர் மதுரையில் இருந்து குள்ளப்புரத்துக்கு வந்்தனர். பின்னர் அவர்கள் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு மதுரைக்கு திரும்பி சென்றனர். 
வழியில் நண்பர்கள் அனைவரும் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை முன்பு உள்ள ஆற்றின் பாலத்திற்கு அடியில் குளித்தனர். அப்போது ஆனந்தரூபன் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் அவரால் கரைக்கு வர முடியவில்லை. இதையடுத்து உயிருக்கு போராடிய அவர் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து அவரது நண்பர்கள் வைகை அணை போலீசுக்கும், ஆண்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஆற்றில் ஆனந்தரூபனின் உடலை தேடினர். இதில் சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடல் கிடைத்தது. பின்னர் அவரது உடல் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்