ஒரே நாளில் 5 கோவில்களில் குடமுழுக்கு
ஒரே நாளில் 5 கோவில்களில் குடமுழுக்கு
கொள்ளிடம்:-
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி சந்தப்படுகை கிராமத்தில் பழமை வாய்ந்த சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்ட யாக சாலை பூஜைகள் நடந்தன. இதன் முடிவில் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதேபோல் சந்தான கணபதி கோவில், வள்ளி-தெய்வானை உடனாகிய சுப்பிரமணியர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், குட்டியாண்டவர் கோவில் ஆகிய கோவில்களிலும் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவையொட்டி பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தன. யாகசாலை பூஜைகளை ஆச்சாள்புரம் ஆகமபிரிவினர் மகாலிங்க சிவாச்சாரியார், வேத சாலை பாடஆசிரியர் திருக்கடையூர் மகாலிங்க குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் மற்றும் நாட்டாமை பஞ்சாயத்தார், திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.