‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-07 13:02 GMT
மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை

சென்னை தண்டையார்பேட்டை சாஸ்திரி நகர் 4-வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் (எண்-278) இருந்து வீடுகளுக்கு ஆபத்தான முறையில் நேரடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து மின்வாரியம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சி.எம்.டி.ஏ.வுக்கு கோரிக்கை

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 18-ம் நுழைவுவாயில் அருகேயுள்ள காலி இடத்தில் காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தகடுகள் பதிக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் வெளியே இருந்து இந்த இடத்தை பார்ப்போர் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. எனவே குப்பை கழிவுகள் கொட்டும் இடம் முழுமையாக மறைக்கப்பட வேண்டும். சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-வியாபாரிகள்.



மின்சார வாரியம் கவனத்துக்கு...

திருவேற்காடு எம்.ஜி.ஆர். நகர் பாலாஜி நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பம் விரிசலடைந்து உள்ளது. வடபெரும்பாக்கம் மாதவரம்- செங்குன்றம் சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கா கூட்டுறவு நகரில் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருக்கிறது.

ஆவடி ஜே.பி.எஸ்டேட் 3-வது மெயின் ரோடு 18-வது தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிபகுதி மிகவும் சேதமடைந்து உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா கண்ணன் கோட்டை கிராமம் விநாயகர் கோவில் தெருவில் உள்ள மின்கம்பங்கள் மோசமான நிலையில் உள்ளது.

-பொதுமக்கள்.

பள்ளத்தால் ஆபத்து

சென்னை கோடம்பாக்கம் சவுத் சிவன்கோவில் தெருவில் ‘டாஸ்மாக்’ கடை எதிரே மழைநீர் செல்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெருவின் பெயர் பலகையும் இந்த பள்ளத்தில் சரிந்து கிடக்கிறது. டாஸ்மாக் கடை அருகே இந்த ஆபத்து இருப்பதால் போதையில் வருபவர்கள் தடுமாறி விழும் அபாயம் இருக்கிறது. எனவே இப்புகார் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாக்குவார் நாதன், சமூக ஆர்வலர்.



வீணாகும் தண்ணீர்

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சுரங்கப்பாதையில் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. சாலையில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகிறார்கள். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்கு குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.பி.பாஸ்கரன், சேத்துப்பட்டு.

சாலை பணி எப்போது முடியும்

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை 7-வது அவென்யூ அப்பாசாமி தெருவில் புதிய சாலை அமைப்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மில்லிங் செய்யப்பட்டது. ஆனால் அதன்பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. எனவே இந்த சாலையில் மிகுந்த சிரமத்துடன் பயணிக்கும் நிலை இருக்கிறது. கிடப்பில் உள்ள சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-பொதுமக்கள்.

குடிநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீ பெருமந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட காட்ராம்பாக்கம் ஊராட்சி புதுப்பேர் கிராமத்தில் குடிநீர் செல்லும் கால்வாயில் கழிவுநீர் விடப்படுகிறது. இதனால் இந்த கால்வாய் பாழ்பட்டு சுகாதார சீர்கேடாக இருக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

-கிராம மக்கள்.

போக்குவரத்து போலீசார் கவனிப்பார்களா...

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சிக்னலில் இருந்து எருக்கஞ்சேரி சிக்னல் வரையில் சாலையின் இருபுறமும் ஏராளமான திருமண மண்டபங்கள் இருக்கின்றன. எனவே சுபமுகூர்த்த நாட்களில் அனைத்து திருமண மண்டபங்களும் நிரம்பி வழிகின்றன. திருமண விழாவில் பங்கேற்க வருவோர்கள் வாகனங்களை சாலையிலே நிறுத்தி விடுகிறார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்சு வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே கூபமுகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு, திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வாகன ஓட்டிகள்.

காலிமனையில் அசுத்தம்

சென்னை மடிப்பாக்கம் 188-வது வார்டு பஸ் நிலையம் எதிரே காலிமனை உள்ளது. தற்போது இந்த இடம் திறந்தவெளி கழிப்பிடம் போன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மிகவும் அசுத்தமாக மாறி வருகிறது.

-ராமு, மடிப்பாக்கம்.

பஸ் பயணிகள் கோரிக்கை

செங்குன்றத்தில் இருந்து அண்ணாசதுக்கத்துக்கு நேரடி மாநகர பஸ் இயக்க வேண்டும். தங்கச்சாலையில் இருந்து யானைக்கவுனி, சென்டிரல் வழியாக கோயம்பேட்டுக்கு பஸ் சேவை தொடங்க வேண்டும். எஸ்.30 வழித்தட மாநகர பஸ்சை சைதாப்பேட்டையில் இருந்து கோயம்பேடு வரை நீட்டிக்க வேண்டும்.

-பயணிகள்.

நாய்களால் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் அடங்கிய சின்ன களக்காட்டூர் கிராமத்தில் நாய்கள் அதிகம் இருக்கின்றன. அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கின்றன. இதனால் குழந்தைகள் தெருவில் விளையாட முடியாதநிலை உள்ளது. பெரியவர்களும் அச்சத்துடன் வெளியே செல்லும் நிலை உள்ளது.

-கோ.பிரவீன் குமார், சமூக ஆர்வலர்.

சுகாதார சீர்கேடு

சென்னை சேத்துப்பட்டு பிருந்தாவனம் பகுதியில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் குப்பைகள் அதிகம் குவிந்துள்ளது. எனவே இப்பகுதி மிகவும் அசுத்தமாக, சுகாதார சீர்கேடாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சமூக நலச்சங்கம், சேத்துப்பட்டு.



மேலும் செய்திகள்