திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா நேற்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாசித்திருவிழா
முருக பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாக்களில் மாசித்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டு மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் 9 சந்திகளிலும் வலம் வந்து கோவிலை சேர்ந்தது.
கொடியேற்றம்
பின்னர் கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5.20 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் தியாகராஜன் பட்டர் கொடியேற்றினார். பின்னர் கொடி மர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மேலும், பூஜையில் கும்பத்தில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீரால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புல்லாலும், பட்டு ஆடைகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டது. வேதமந்திரம் முழங்க, “அரோகரா” கோஷத்துடன் சோடச தீபாராதனை நடந்தது. பின்னர் கட்டியம் கூறப்பட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. நான்கு வகை வேதங்கள், பாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கலந்து கொண்டவர்கள்
இதில், திருவாவடுதுறை ஆதீனம் அருணாச்சல தம்பிரான் சுவாமிகள், தாசில்தார் சுவாமிநாதன், கோவில் தக்கார் பிரதிநிதியும் ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் வெங்கடேஷ்,
இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தபாண்டி நாடார், கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர்கள் ராஜ்மோகன், சொர்ணம், மேலாளர் ராஜேஷ் உள்பட திரளான பக்தர்கள் கொண்டனர்.
சுவாமி வீதிஉலா
மாலை 4 மணிக்கு மேல் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவிலை சேர்ந்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீபெலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்த பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு 9 சந்திகளில் உலா வந்து கோவிலை சேர்ந்தார்.
2-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் 8 வீதிகளிலும் உலா வருகிறார்கள்.
--------------------