ஆனைமலை அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை

ஆனைமலை அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-02-07 08:40 GMT
ஆனைமலை

ஆனைமலை அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கூலி தொழிலாளி

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 34). இவருடைய நண்பர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த கேப்டன் என்ற செல்வராஜ் (44). இவர்கள் 2 பேரும் தென்னந்தோப்புகளில் தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் ஆனைமலை அருகே உள்ள திவான்சாபுதூரில் உள்ள தோட்டத்திற்கு தேங்காய் உரிக்க சென்றனர். பின்னர் வேலை முடிந்ததும் 2 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அடித்து கொலை 

அப்போது, குடிபோதையில் மகாலிங்கம், செல்வராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து மகாலிங்கம் தலையில் பயங்கரமாக தாக்கினார்.

இதனால் பலத்த காயம் அடைந்த மகாலிங்கம், ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனைக்கண்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதற்கிடையில், செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வராஜ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நண்பருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, செல்வராஜை அடித்து கொலை செய்த மகாலிங்கத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை நண்பரே அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்