கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆனைமலை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆனைமலை
ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஆனைமலை போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கெட்டிமேளம்புதூர் ரெயில்வே கேட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவருக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் அம்பராம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் (வயது 34) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.