வாழைத்தோட்டத்தில் பதுக்கி வைத்த 16 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல்
வாழைத்தோட்டத்தில் பதுக்கி வைத்த 16 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல்
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே உள்ள சுருளோடு பன்னியோடு பகுதியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பன்னியோடு பகுதிக்கு விரைந்து வந்து தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், 2 மூடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வீரப்புலி பகுதியை சேர்ந்த ஜோஸ்(வயது 33), அழகியபாண்டியபுரம் தோமையார்புரம் பகுதியை சேர்ந்த குமார்(32) என்பதும், பன்னியோட்டில் ஜோஸ் குத்தகைக்கு எடுத்திருந்த ஒரு வாழைத்தோட்டத்தில் உள்ள அறையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து தடிக்காரன்கோணம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வாழைத்தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 14 மூடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ஜோஸ், குமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்த புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.