ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவி அடித்துக்கொலை
நாகர்கோவிலில் பட்டப்பகலில் நகைக்காக ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவியை அடித்துக்கொலை செய்து விட்டு தப்பிய கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.;
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பட்டப்பகலில் நகைக்காக ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவியை அடித்துக்கொலை செய்து விட்டு தப்பிய கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
ஓய்வு பெற்ற பேராசிரியர் மனைவி
நாகர்கோவில் அனாதைமடம் கவிமணி நகரை சேர்ந்தவர் செல்லையா (வயது 76). இவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பேபி சரோஜா (70). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி பல்வேறு இடங்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு செல்லையா இறந்து விட்டார்.
அதன்பிறகு பேபி சரோஜா வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த பேபி சரோஜா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என குரல் எழுப்பினார். உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். ஆனால் பேபி சரோஜா வீட்டின் முன் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்தனர். அப்போது வீட்டின் பின்பகுதியில் இருந்து ஒரு மர்மநபர் மாடியை நோக்கி வேகமாக ஓடி தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பாரதி நகரில் வசிக்கும் பேபி சரோஜாவின் மகளுக்கு தகவல் தெரிவித்தனர்
கொலை
உடனே அவர் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சமையல் அறையில் தலையில் காயத்துடன் பேபி சரோஜா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்ததும் பேபி சரோஜாவின் மகள் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுத னர். மேலும் பேபி சரோஜா அணிந்து இருந்த நகை மற்றும் 2 வளையல்களை காணவில்ைல. அவை கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்த கொலை பற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கொள்ளை
போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் மாடியில் மர்மநபர் கொள்ளையடித்து சென்ற நகை மற்றும் 2 வளையல்கள் கிடந்தன. மேலும் வீட்டு முன்பு மர்மநபரின் ஸ்கூட்டரும் நின்றது. இந்த சம்பவத்தை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
பேபி சரோஜா வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர், வீட்டுக்குள் புகுந்து, கதவை உள்புறமாக பூட்டியதாகவும், பின்னர் ேபபி சரோஜா கழுத்தில் கிடந்த நகை மற்றும் அவர் கையில் அணிந்திருந்த 2 தங்க வளையல்களை பறிக்க முயன்ற போது, அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டதால் அவரை தாக்கியதோடு, வாயை பொத்தியிருக்கலாம் என தெரிகிறது. இதில் பேபி சரோஜா மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விசாரணை
இதற்கிடையே பேபி சரோஜாவின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்ததை பார்த்ததும், பதற்றத்தில் கொள்ளையன் நகை மற்றும் வளையல்களை விட்டு சென்று இருக்கலாம் என்றும் தெரிகிறது. அவற்றை மீட்ட போலீசார், மேலும் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை போய் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமரா ஏதேனும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஸ்கூட்டரை விட்டு சென்ற கொள்ளையன்
பேபி சரோஜாவை கொலை செய்து விட்டு, நகையை கொள்ளையடித்து விட்ட மர்ம நபர் தப்பிச் செல்ல வசதியாக ஸ்கூட்டரில் வந்தான். இதற்காக அந்த வீட்டின் முன் நிறுத்தி விட்டு கொள்ளையடிக்க சென்றபோது, பேபி சரோஜா அபய குரல் எழுப்பியதால், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். இதனால் மாடி வழியாக தப்பிக்கும் முயற்சியில் ஸ்கூட்டரை அங்கேயே விட்டு சென்று விட்டான். அதை போலீசார் கைப்பற்றினார்கள். ஸ்கூட்டர் மர்ம நபரால் திருடி வந்ததாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இருந்த போதிலும் அது யாருக்கு சொந்தமானது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவி நகைக்காக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.