தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பராமரிப்பற்ற கழிவறை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிவறையில் போதிய பராமரிப்பு வசதி இல்லை. இங்குள்ள குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசரத்திற்கு கழிவறையை பயன்படுத்த முடியவில்லை. பராமரிப்பு இல்லாத காரணத்தால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஆதலால் இந்த கழிவறையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த சாலை
மதுரை மாவட்டம் கே.புதூரிலிருந்து தல்லாகுளம், யானைக்கல், சிம்மக்கல் பாலம் வழியாக பெரியார் பஸ் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து நிறைய இடங்களில் பள்ளமாக உள்ளது. இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் வசதி
ராமேசுவரம் மாவட்டம் வேர்க்கோட்டிலிருந்து சுந்தரமுடையான் கிராமத்திற்கு பகல் நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பஸ் சரியான நேரத்திற்கு இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் அதிலும் குறிப்பாக மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே பயணிகள் நலன் கருதி சரியான நேரத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் திருமால் பஞ்சாயத்து புதுப்பட்டி கிராமத்தில் இருந்து காரியாபட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. தினமும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டியில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. ஆதலால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி கழிவுநீர் கலக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
மதுரை மாவட்டம் ஆனையூரை அடுத்த பல்லவி நகர், பாலாஜி நகர், சுகந்தி நகர், அங்கயற்கண்ணி நகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே தற்சமயம் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைப்பதுடன், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.