ஆட்டோ கவிழ்ந்து முதியவர் சாவு

சிவகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்து முதியவர் இறந்தார்.;

Update: 2022-02-06 20:28 GMT
சிவகிரி:
சிவகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்து முதியவர் இறந்தார்.

ஆட்டோ கவிழ்ந்தது

சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் பஞ்சாயத்து கீழூர் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 74). இவரின் உறவினரின் மகள் நிச்சயதார்த்தம் தேவிபட்டணத்தில் நடைபெற்றது. இதற்காக வந்திருந்த புளியங்குடி சிந்தாமணியைச் சேர்ந்த 4 பேர் நிகழ்ச்சி முடிந்ததும் சிவகிரி பஸ் நிலையத்துக்கு ஒரு ஆட்டோவில் புறப்பட்டனர். அவர்களுடன் முனியாண்டியும் சென்றார். குருவையா (53) என்பவர் ஆட்டோவை ஓட்டினார். விஸ்வநாதப்பேரி துணை மின்நிலையம் அருகே வந்தபோது ஆட்டோ எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் முனியாண்டி பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆட்டோவை தூக்கி நிறுத்தினர். காயம் அடைந்த முனியாண்டியை மீட்டு அதே ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

முதியவர் சாவு

சிவகிரி பெட்ரோல் பங்க் வடக்கே வெற்றிலை குச்சில் பாலத்தின் அருகே சாலையின் கீழ்ப்புறத்தில் சென்றபோது மீண்டும் 2-வது முறையாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் மேலும் படுகாயமடைந்த முனியாண்டியை மற்றொரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முனியாண்டி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்