வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள்

மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று மாவட்ட தேர்தல் பார்வையாளர் அதிகாரி களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.;

Update:2022-02-07 00:50 IST
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார பார்வையாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் லட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் லட்சுமி கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகளுக்கும், அனந்தபுரம், அரகண்டநல்லூர், திருவெண்ணெய்நல்லூர், மரக்காணம், செஞ்சி, விக்கிரவாண்டி, வளவனூர் ஆகிய 7 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் 210 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக 348 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

கவனமாக பணிகளை மேற்கொள்ள

ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு அந்த மையங்களில் முன்னேற்பாடு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கவனமாக படித்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் தகவல் ஏதேனும் பெற விரும்பினால் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகேரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர்காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்