விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
சுவாமிமலை அருகே விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கபிஸ்தலம்:-
சுவாமிமலை அருகே விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மின் திருத்த சட்டம் 2020-ஐ மத்திய அரசு முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின்படி வீடுகளுக்கு கட்டணமில்லா குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கடந்த 2004-ம் ஆண்டு முதல் மின் மோட்டார் இணைப்புக்காக காத்திருக்கும் 3.5 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.
விவசாய மின் இணைப்பிற்காக தடையில்லா சான்று பொதுப்பணித் துறையிடம் பெற வேண்டும் என்ற உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சுவாமிமலை அருகே உத்திரை கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உறுதிமொழி ஏற்பு
ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பரமசிவம் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
முன்னதாக இலவச மின்சாரம் பெறுவதற்கு முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் உருவப்படத்திற்கு விவசாய சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து இந்த கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவது என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சங்க செயலாளர் சுந்தர. விமலநாதன், ஏரகரம் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.