ஆலங்காயத்தில் ஆவணமின்றி எடுத்துசென்ற ரூ.99 ஆயிரம் பறிமுதல்
ஆலங்காயத்தில் ஆவணமின்றி எடுத்துசென்ற ரூ.99 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஆலங்காயம் அடுத்த கல்லரபட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் தேவகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தவழியாக மோட்டார்சைக்கிளில் வந்த கல்லரபட்டி பகுதியை சேர்ந்த பிரபு (வயது 35) என்ற நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில், முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அவர் வைத்திருந்த ரூ.99 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.