திருப்பத்தூர் நகராட்சி தேர்தலில் கட்சியில் ‘சீட்’ கிடைக்காதவர்கள் சுயேச்சையாக போட்டி
திருப்பத்தூர் நகராட்சி தேர்தலில் கட்சியில் சீட் கிடைக்காதவர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சி தேர்தலில் கட்சியில் சீட் கிடைக்காதவர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். அவர்களை கட்சி வேட்பாளர்கள் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுயேச்சையாக போட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சீட் கேட்டு விண்ணப்பித்தனர். திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விவரத்தை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வெளியிட்டது. இதில் சீட் கேட்டிருந்த பெரும்பாலான நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். சில இடங்களில் ஒரு வார்டில் ஒரே கட்சியைச் சேர்ந்த 3 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சேரவேண்டிய வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமரச முயற்சி
அதனால் கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றி குறித்து கவலை அடைந்து சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ள தங்கள் கட்சி வேட்பாளர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேராத வகையில் சீட் கிடைக்காத அந்தக் கட்சி நிர்வாகிகள் மறைமுக எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், எதிர்தரப்பை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிக்காக வேலை செய்து வருவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களிடம் வாக்குகளை பெற தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி வேட்பாளர்கள் சுயேச்சையாக மனு தாக்கல் செய்ததை வாபஸ் பெற வேண்டி அவரது ஆதரவாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.