நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது

Update: 2022-02-06 18:02 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளில் உள்ள 414 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி இந்த மாதம் 4-ந் தேதி வரை நடந்தது.
இதில் 414 பதவிகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 276 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 
தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு 480 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது தகுதியில்லாத மனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.
மனு தள்ளுபடி
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 475 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதேபோல் கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகளிலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 542 மனுக்களில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற 529 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மேலும் 18 பேரூராட்சிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட ஆயிரத்து 254 மனுக்களில் 30 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற ஆயிரத்து 224 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 
மாவட்டத்தில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 276 மனுக்களில் 48 மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 2 ஆயிரத்து 228 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இறுதி பட்டியல்
வேட்புனுக்களை வாபஸ் பெற இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை இன்று மாலை 3 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் அறிவிக்கப்படுகின்றன.
நாளை முதல் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு வரும் 19-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 22-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ் அறிவுரையின் பேரில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்