அய்யனார் கோவில்களில் குடமுழுக்கு

திருவெண்காடு மற்றும் செம்பனார்கோவில் பகுதி அய்யனார் கோவில்களில் நேற்று குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-02-06 17:35 GMT
திருவெண்காடு:
திருவெண்காடு மற்றும் செம்பனார்கோவில் பகுதி அய்யனார் கோவில்களில் நேற்று குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அய்யனார் கோவிலில் குடமுழுக்கு
திருவெண்காடு அருகே ராதாநல்லூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கழுமங்கல உடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், கடந்த 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை), கணபதி பூஜையுடன் முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், மகாபூர்ணாகுதியும் நடந்தன.
நேற்று அதிகாலை கோமாதா பூஜையுடன் 4-ம் கால யாகபூஜை நடந்தது. இதில் மகாபூர்ணாகுதி மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்கிட சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய யாக குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று கோபுரத்தை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் குடமுழுக்கு நடந்தது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. 
திரளான பக்தர்கள் தரிசனம்
அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் சரணம் ஐய்யப்பா சரணம் ஐய்யப்பா என சரண கோஷ மிட்டனர். பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 
இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. விழாக்குழு தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான அகோரம், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், கிராம நாட்டாமைகள், பஞ்சாயத்தார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
பொறையாறு
செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர், பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆகிய கோவில்களில் உள்ள சாமிகளுக்கு எல்லை காவல் தெய்வமாக விளங்கும் செல்லப்பார் கோவில் பரசலூர் ஊராட்சி மேலக்கட்டளை கிராமத்தில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிந்தன.
பின்னர் நேற்று குடமுழுக்குக்கான யாக குண்டங்கள் அமைத்து அதில் பல்வேறு நறுமண பொருட்களை செலுத்தி சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யானை ஊர்வலத்துடன் புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்தனர். அங்கு வேதங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க விமான கலசத்தில் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்