தீப்பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்
திண்டுக்கல்லில் ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது.;
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரண்மனைகுளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கச்சாமி (வயது 29). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்திருந்தார். இந்த ஆம்புலன்சை இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை தங்கச்சாமி தனது ஆம்புலன்ஸ் வாகனத்தை நாகல்நகர் ரவுண்டானா அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிவதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜூ தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனமும், அதன் அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளும் தீப்பற்றி எரிந்தன. இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆம்புலன்ஸ் மற்றும் குப்பையில் பற்றிய தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் முழுமையாக எரிந்து நாசமானது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் கூறுகையில், ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகில் கிடந்த குப்பை குவியலில் தான் முதலில் தீப்பற்றி உள்ளது. பின்னர் அது ஆம்புலன்ஸ் வரை பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்தது. எனவே குப்பைக்கு யாரேனும் தீ வைத்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.