திருமருகல் பகுதியில் வயல்களில் தேங்கி கிடக்கும் வைக்கோல்
வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல் பகுதியில் வயல்களில் வைக்கோல் தேங்கிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
திட்டச்சேரி:
வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல் பகுதியில் வயல்களில் வைக்கோல் தேங்கிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சம்பா சாகுபடி
நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருமருகல் பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு,முடிகொண்டான் ஆறு,வடக்குப்புத்தாறு, ஆழியாறு, நரிமணி ஆறு, வீர முட்டி-ஆறு, தெற்குப்புத்தாறு, பிராவடையானாறு, வளப்பாறு ஆகிய ஆறுகள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போது திருமருகல் பகுதியில் சுமார் 25 எக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இப்பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களை புகையான்,குலை நோய் போன்ற பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு மகசூல் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருமருகல் பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் எந்திரம் மூலம் விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோலை குவியலாக குவித்து வைத்துள்ளனர்.
தேங்கி கிடக்கும் வைக்கோல்
கால்நடைகளுக்கு உணவுக்காக இந்த வைக்கோலை விவசாயிகள் பயன்படுத்தி வந்த போதிலும்,பேப்பர் தயாரிப்பு மற்றும் பிற தேவைகளுக்காக வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வந்து வைக்கோலை வாங்கி செல்வது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு வைக்கோல் விற்பனை குறைந்து காணப்படுகிறது.
வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல், அண்ணாமண்டபம், குருவாடி, போலகம்,தென்பிடாகை, திருப்புகலூர்,திருச்செங்காட்டங்குடி உள்ளிட்ட பல் வேறு பகுதியில் ஆங்காங்கே வயல்களில் வைக்கோல் தேங்கிக்கிடக்கிறது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.