‘தினத்தந்தி’ புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.;
திண்டுக்கல்:
சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பைகள்
தேனி புது பஸ் நிலையம் அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்த போதும் சாலை ஓரத்திலேயே குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வேந்திரன், தேனி.
சேதமடைந்த சாலை
சாணார்பட்டி ஒன்றியம் அம்மாபட்டியில் இருந்து வி.எஸ்.கோட்டைக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிபடுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவுசல்யா, ஆவரம்பட்டி.
பழுதடைந்த மின் மோட்டார்
சாணார்பட்டி ஒன்றியம் கோணப்பட்டி தெற்கு தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிக்கான மின்மோட்டார் பழுதடைந்து ஒருமாதங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் பள்ளி வளாகத்தில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுவது இல்லை. தண்ணீர் கிடைக்காததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளிதாஸ், கோணப்பட்டி.
சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?
நிலக்கோட்டை தாலுகா சாலைப்புதூர் கிழக்கு தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனீஸ்வரன், சாலைப்புதூர்.