விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் 6 பெண்களிடம் 19 பவுன் நகை திருட்டு
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் 6 பெண்களிடம் 19 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் விருத்தாசலம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட விருத்தாசலம் அடுத்த தீவளூரை சேர்ந்த பிரேமாவிடம் (வயது 40) கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் சிலர், அவரது நகையை திருடினர்.
6 பெண்களிடம்...
இதேபோல் கொடுக்கூரை சேர்ந்த சுந்தரியிடம் 6 பவுன் நகை, பெண்ணாடத்தை சேர்ந்த மங்கையர்க்கரசியிடம்(50) 1 பவுன் நகை, விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த துர்காதேவியிடம் (34) 4½ பவுன் நகை, மருதத்தூர் ஆவினங்குடியைச் சேர்ந்த அமிர்தவள்ளியிடம் (55) 2 பவுன் நகை, நெய்வேலியை சேர்ந்த மஞ்சுளாவிடம் (66) 3 பவுன் நகையையும் மர்மநபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து 6 பேரும் கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.