பெண்ணாடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளை

பெண்ணாடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-02-06 16:58 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த முருகன்குடி அக்ரகார தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 70). இவருடைய மனைவி பிரேமா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுடைய மகன் வெங்கடேசன் (32) புதுச்சேரியில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இதனால் நாகராஜன் மட்டும் முருகன்குடியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் வெளியூர் சென்றார். பின்னர் நேற்று காலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 3 பீரோக்களும் திறந்து கிடந்ததுடன், துணிமணிகளும் சிதறிக்கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. 

ரூ.6 லட்சம்

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் கடலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்