வேளுக்குடி ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான வளைவு
கூத்தாநல்லூர் அருகே திருவாரூர்-மன்னார்குடி வழித்தடத்தில் உள்ள சாலையையொட்டி வேளுக்குடி கிராமம் உள்ளது. இந்த வேளுக்குடி சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் உள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
அடிக்கடி விபத்து
வேளுக்குடி சாலையில் ஆபத்தான வளைவு உள்ளதால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு பலர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், பலர் இறந்து உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆபத்தான வளைவு உள்ள இடத்தில் கோம்பூர் சந்திப்பு சாலை, பஸ் நிறுத்தம் மற்றும் கடைவீதி உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் ஆபத்தான வளைவு உள்ள வேளுக்குடி சாலையில் வேகத்தடை அமைத்து தர வேண்டு்ம் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேகத்தடை அமைக்க வேண்டும்
எனவே விபத்தை தடுக்கும் வகையில் வேளுக்குடி ஆபத்தான வளைவில் இரண்டு பக்கமும் வேகத்தடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.