அமைச்சரிடம் மனு கொடுக்க திரண்டு வந்த 3 மாவட்ட விவசாயிகள்

திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமியிடம் மனு கொடுப்பதற்காக 3 மாவட்ட விவசாயிகள் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-06 16:55 GMT
திண்டுக்கல்: 


திண்டுக்கல்லில் திரண்ட விவசாயிகள்
சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் நேற்று திண்டுக்கல்லுக்கு திரண்டு வந்தனர். இதை அறிந்த போலீசார், திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி அருகே அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, பயிர் கடன் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமியை நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கூட்டமாக செல்ல அனுமதிக்க முடியாது. எனவே விவசாயிகள் சார்பில் சிலர் மட்டும் சென்று அமைச்சரிடம் மனு கொடுக்கும் படி அறிவுறுத்தினர். இதையடுத்து விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் உள்பட சிலர் மட்டும் அமைச்சரின் வீட்டுக்கு மனு கொடுப்பதற்காக சென்றனர்.

பயிர்க்கடன் வழங்க வேண்டும்
அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அமைச்சரை நேரில் சந்திக்க அனுமதிக்க முடியாது என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே விவசாயிகள் மனு கொடுக்க வந்தது குறித்து அறிந்த அமைச்சர் இ.பெரியசாமி வீட்டை விட்டு வெளியே வந்து விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவரிடம் விவசாயிகள் கொடுத்த கோரிக்கை மனுக்களில் கூறியிருப்பதாவது:-
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஏற்கனவே பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு விதிமீறல் இருப்பதாக கூறி கடன் தள்ளுபடி செய்யப்படாமல் இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விவசாயிகள் முறையிட்டதும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பயிர் கடனை முறையாக திரும்ப செலுத்திய சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மறு கடன் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்
மேலும் கூட்டுறவு சங்கங்களில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என்று அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்த காலக்கெடுவை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.  
மனுக்களை பெற்ற அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்