கும்பகோணம் பகுதி கோவில்களில் குடமுழுக்கு

கும்பகோணம் பகுதி கோவில்களில் குடமுழுக்கு விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-02-06 16:48 GMT
கும்பகோணம்:-

கும்பகோணம் பகுதி கோவில்களில் குடமுழுக்கு விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

கும்பகோணம் மாரியம்மன் கோவில்

கும்பகோணம் பழனி ஆண்டவர் சன்னதி தெருவில் உள்ளது கிணற்றடி மாரியம்மன் கோவில். இக்கோவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலம் அடைந்த காரணத்தினால் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் நடந்தன. இதைத்தொடர்ந்து கடந்த 4-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. 
யாகசாலை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தெரு வாசிகளும், அம்மன் பக்தர்கள் குழுவினரும் செய்திருந்தனர்.

பாபநாசம் இரட்டைப்பிள்ளையார் கோவில் 

பாபநாசம் வடக்கு வீதியில் இரட்டைப் பிள்ளையார் என்கிற தாமோதர விநாயகர் கோவில் உள்ளது. இங்கு குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.  
இதில் இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாக அதிகாரி ஹரிஷ் குமார், தக்கார் லட்சுமி மற்றும் பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருவிஜயமங்கை விஜயநாதர் கோவில்

கபிஸ்தலம் அருகே திருவைகாவூர் ஊராட்சி திருவிஜயமங்கை கிராமத்தில் திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான மங்கைநாயகி உடனாகிய விஜயநாதர் கோவில் உள்ளது. இங்கு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்தன. 
இதைத்தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை குடமுழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். 

மேலும் செய்திகள்