நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வட்டார பார்வையாளர்கள் நியமனம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் திரும்ப பெற இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இதையடுத்து மாலை தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு வட்டார பார்வையாளர்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான திவ்யதர்சினி நியமித்துள்ளார். அதன்படி தர்மபுரி நகராட்சிக்கு வட்டார பார்வையாளராக மகளிர் திட்ட இணை இயக்குனர் பாபு நியமிக்கப்பட்டு உள்ளார்.
பேரூராட்சிகள்
இதேபோன்று காரிமங்கலம் பேரூராட்சிக்கு தேர்தல் பார்வையாளராக தணிக்கை துறை உதவி இயக்குனர் முரளிகண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கடத்தூர் பேரூராட்சிக்கு மொரப்பூர் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், அரூருக்கு மொரப்பூர் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பி.மல்லாபுரத்திற்கு மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் அங்குசாமி, பாலக்கோட்டுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் மணிமேகலை ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பென்னாகரத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாரண்டஅள்ளிக்கு தர்மபுரி ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பாரப்பட்டிக்கு பென்னாகரம் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சம்பத், பாப்பிரெட்டிப்பட்டிக்கு தர்மபுரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) -ராமச்சந்திரன், கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் உஷாராணி ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.