தை மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

தை மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை;

Update: 2022-02-06 16:16 GMT
நாமக்கல்:
தை மாத சஷ்டியையொட்டி நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி நாமக்கல்- மோகனூர் சாலை காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று காலை எண்ணெய், பால், தயிர் உள்ளிட்டவை கொண்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, ராஜஅலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சந்தனகாப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தை மாத சஷ்டியையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. அதன்படி கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலிஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்தி நகர் முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்