பாகற்காய் சாகுபடி தாமதம்
கூடலூரில் தொடர் மழையால் பாகற்காய் சாகுபடி தாமதமாகி உள்ளது.
கூடலூர்
கூடலூரில் தொடர் மழையால் பாகற்காய் சாகுபடி தாமதமாகி உள்ளது.
பாகற்காய் சாகுபடி
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டில் சரியான நேரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை மிகவும் தாமதமாக பெய்தது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து நீடித்தது. இதன் காரணமாக விவசாய நிலங்களில் சேறும், சகதியும் நிறைந்து இருந்ததால் கோடைகால பயிர்களை நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் மழைக்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கியது. இதனால் தாமதமாக பாகற்காய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்தினர். பாகற்காய் கொடிகள் படர்வதற்கு பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது கொடிகள் பூத்து காய்க்கும் பருவத்துக்கு வந்து உள்ளது.
விளைச்சலில் பின்னடைவு
வழக்கமாக ஜனவரி மாத இறுதியில் பாகற்காய் அறுவடை தொடங்கப்படும். ஆனால் தொடர் மழையால் தாமதமாக விவசாய பணி நடைபெற்றதால் பாகற்காய் விளைச்சல் மற்றும் அறுவடை பணியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பாகற்காய் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
அதிக தொடர் மழை காரணமாக கோடை வெயிலை சமாளித்து வளரக்கூடிய பாகற்காய், புடலங்காய், அவரைக்காய் உள்ளிட்ட கோடைகால பயிர்களை நடவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இல்லையெனில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதியில் பாகற்காய் உள்ளிட்ட பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
இயற்கை உரம்
இந்த ஆண்டில் பாகற்காய் இதுவரை விளையவில்லை. இந்த மாத இறுதியில் விளைச்சல் ஏற்பட்டு, பாகற்காய் அறுவடை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக கூடலூர் பகுதியில் மாயா என்று அழைக்கப்படும் வீரிய ரக பாகற்காய் இயற்கை வேளாண் முறையில் பயிரிடப்படுகிறது.
தொடர்ந்து கோழி இறைச்சி கழிவுகள், பஞ்ச மற்றும் தசை கவ்யா, ஜீவாமிர்தம் இயற்கை உரமாக அளிக்கப்படுகிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் இந்த வேளாண் பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.