‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-06 13:51 GMT
மின்வாரிய நடவடிக்கையும், மக்களின் பாராட்டும்...

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி சோழவரம் ஊராட்சியில் அடங்கியுள்ள நாரணம்பேடு பகுதியில் 15 ஏக்கர் விவசாய நிலத்துக்கு மேலே சென்ற மின்சார வயர்கள் அறுந்து, அருகே உள்ள மரக்கம்புகளை வைத்து தூக்கி நிறுத்தப்பட்டிருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அந்த மின்வயர்களை தாங்கி பிடிக்கும் வகையில் மின்கம்பத்தை நட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்காக மின்வாரியத்துக்கும், உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.



திருவல்லிக்கேணி-மாதவரத்துக்கு பஸ் இயக்கப்படுமா?

சென்னை திருவல்லிக்கேணியில் தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இதனால் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி திருப்பதி, ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அவர்கள் செல்லவேண்டியதுள்ளது. தற்போது ஆந்திராவுக்கு செல்லும் அரசு பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. எனவே மக்கள் நலன் கருதி திருவல்லிக்கேணியில் இருந்து மாதவரத்துக்கு நேரடி பஸ் சேவை இயக்கப்பட வேண்டும்.

- டி.ஸ்ரீகாந்த், திருவல்லிக்கேணி.

ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

சென்னையை அடுத்த பொன்னியம்மன்மேடு வள்ளியம்மைநகரில் மழைநீர் வடிகால்வாய் அருகே ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளம் பிளைவூட் ஷீட்கள் மற்றும் மரப்பலகைகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த பகுதியை கடக்கும்போதே மக்கள் அச்சம்கொள்வதை பார்க்க முடிகிறது.

- பகுதிவாசிகள், வள்ளியம்மை நகர்.



கழிவுநீர் பிரச்சினையால் அவதி

சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் கழிவுநீர் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது. சாலையோரம் கால்வாயில் அடைப்பு காரணமாக கழிவுநீர் தேங்கியிருக்கிறது. இச்சாலையில் சில பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்தும், பெயர்ந்தும் இருக்கின்றன.

- பொதுமக்கள், தியாகராயநகர்.



ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் ஆறு சாலை - ரெக்ஸ் தெரு சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு மின் இணைப்பு பெட்டி மிகவும் அபாயகரமாக இருக்கிறது. கதவு பெயர்ந்து, வயர்கள் வெளியே நீட்டிக்கொண்டு இப்பெட்டி காட்சி தருகிறது.

- சமூக ஆர்வலர்.



நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகரில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் பல மூடியின்றியும், மூடிகள் பெயர்ந்தும், சேதமடைந்தும் படுமோசமாக இருக்கிறது. சாலையோரம் உள்ள இந்த ஆபத்தான தொட்டிகளில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துகள் நேர்ந்துள்ளன.

- பொதுமக்கள்.



இருளர் இன மக்களின் துயரம்

திருவள்ளூர் மாவட்டம் புதுவள்ளூர் கிராமத்தில் இருளர் மன மக்கள் பலர் குடும்பம் குடும்பமாக வசிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு இதுவரை ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. இந்தநிலையில் புதுவள்ளூரில் உள்ள அரசு அனாதினம் இடம் மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் வீட்டுமனை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

- எம்.பாலசுப்பிரமணியன், அரண்வாயல் கிராமம்.

உடற்பயிற்சி கூடம் சீரமைக்கப்படுமா?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மெதூர் கிராமத்தில் உள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இந்த பூங்கா வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் இரவு வேளையில் மது அருந்தும் இடமாக மாறி போகிறது. அந்தளவு இந்த பூங்காவை அலங்கோலப்படுத்தி வருகிறார்கள்.

- மெதூர் கிராம இளைஞர்கள்.

எரியாத மின்விளக்குகளால் மக்கள் சிரமம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் சுமார் 500 வீடுகள் உள்ளன. ஆனால் இங்குள்ள தெருக்களில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரிவதே கிடையாது. இதனால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

- கு.ராஜேஷ், அழிஞ்சிவாக்கம்.

முடிவுற்ற மேம்பாலம் திறக்கப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அடுத்து அமைந்துள்ள கிளாம்பாக்கம் தேவேந்திரர் நகர் ரெயில்வே கேட் மூடப்பட்டு, அதன் அருகே மேம்பாலமும் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட இந்த மேம்பாலம் 7 வருடங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.

- எஸ்.துரைசாமி, கிளாம்பாக்கம்.

மேலும் செய்திகள்