அண்ணாமலை ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

அண்ணாமலை ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-02-06 13:36 GMT
திருப்பூரில் உண்ணாமுலை அம்பிகை உடனமர் அண்ணாமலை ஈஸ்வரர்  கோவில் கும்பாபிஷேக திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையார் ஈஸ்வரர் கோவில்
திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் 2ஆயிரத்து 500 ஆண்டு பழமை வாய்ந்த உண்ணாமுலை அம்பிகை உடனமர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நேற்று நடைபெற்றது. பல புண்ணிய நதிகளில் இருந்து நீர் எடுத்து வரப்பட்டு, யாக பூஜைகள் செய்யப்பட்டு காலை 7.35 மணி அளவில் மங்கல இசையுடன் புதிய ராஜகோபுரம் மற்றும் கருவறை விமானங்கள் சமகால நன்னீராட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
 கும்பாபிஷேக விழாவில் பேரூர் ஆதீனம் கயிலை மாமுனிவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை சிரவை ஆதீனம் கவுமார மடாலயம் சீர்வளர்சீர் முனைவர் குமரகுருபர சுவாமிகள், ரத்தினகிரி பால முருகன் அடிமை சுவாமிகள், வேலூர் கலவை சச்சிதானந்த சாமி, கல்யாணபுரி ஆதீனம்  குருமகாசந்நிதானம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை ஈஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக பூஜை ஆராதனைகள் நடைபெற்றது. 
அன்னதானம் 
கும்பாபிஷேக விழாவை காண வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருப்பூர் பவளக்கொடி கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். மாலை சிறப்பு அலங்காரம் பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலை ஈஸ்வரரை வணங்கி அருள் பெற்றுச்சென்றனர். 
மேலும் இன்று (திங்கட்கிழமை) முதல்  48 நாட்கள் மாலை 5 மணிக்கு மண்டல அபிஷேக பூஜை நடைபெறும். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள், தொழில்துறையினர் கட்சி பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் அனைவருக்கும் உண்ணாமுலை உடனமர் அண்ணாமலையாரை கோவில் திருப்பணி குழுவினர், விழா கமிட்டியினர் மற்றும் இளைஞர் அணியினர், கோவில் அர்ச்சகர்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்