பொதுமக்கள் சாலைமறியல்

பொதுமக்கள் சாலைமறியல்

Update: 2022-02-06 12:03 GMT
திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு ஏற்படுவதாகவும், அந்த பகுதியில் சுகாதாரத்தை பேணக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளன. இங்கு 240 குடியிருப்பில் மக்கள் வசித்து வருகிறார்கள். ஆதிதிராவிடர்கள் உள்ளிட்டவர்கள் அங்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என்று கூறி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை 11 மணி அளவில் செல்லாண்டியம்மன் துறை முன்பு உள்ள ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த காங்கேயம் ரோடு செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கிய புகைப்படங்கள் மற்றும் கண்டன வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை அங்கு வைத்திருந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது
 'கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இங்கு குடியிருப்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு வந்து வாக்கு கேட்கிறார்கள். பின்னர் தங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். எனவே கழிவு நீரை முறையாக அகற்ற வேண்டும். குப்பைகளை அகற்ற வேண்டும். சுகாதாரத்தை பேண வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்