நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 354 நாட்கள் சிறை
நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 354 நாட்கள் ஜாமீனில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை சிவராஜபுரம் பெரம்பூர் பேரக்ஸ் சாலை முதல் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26). ரவுடியான இவர் மீது 1 கொலை முயற்சி, கஞ்சா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. மணிமாறன் கடந்த மாதம் 10-ந்தேதி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் முன்பு நேரில் ஆஜராகி, ‘நான் இனிமேல் திருந்தி வாழப்போகிறேன். ஓராண்டு காலத்துக்கு எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டேன்’ என்று நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை எழுதி கொடுத்தார். ஆனால் அவர் அளித்த உறுதிமொழியை 5 நாட்களிலேயே காற்றில் பறக்கவிட்டார்.
சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கடந்த மாதம் 15-ந்தேதி அன்று ஜோசப் அமுல்ராஜ் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மணிமாறன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நன்னடத்தை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக மணிமாறன், 354 நாட்கள் ஜாமீனில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகவலன் பிறப்பித்தார்.