கொருக்குப்பேட்டையில் டாஸ்மாக் பார் ஊழியர் அடித்துக்கொலை
கொருக்குப்பேட்டையில் டாஸ்மாக் பார் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
பார் ஊழியர் அடித்துக்கொலை
சென்னை கொருக்குப்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் உள்ள பாரில் கேரளாவை சேர்ந்த பாபு (வயது 48) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாரை மூடிவிட்டு கடையின் மாடியில் படுத்து தூங்கிய பாபு, நேற்று காலை பிணமாக கிடந்தார்.
அவரது உதடு, கன்னம் ஆகிய இடங்களில் ரத்த காயம் காணப்பட்டது. இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் உரிமையாளர் ரவிச்சந்திரன், மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி (40) ஆகியோரிடம் விசாரித்தனர்.
அதில் நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க ஊனமுற்ற ஒருவர், பாரில் வேலை கேட்டு வந்தார். அவரை பாபுவுடன் இரவு தங்க வைத்தோம். அதிகாலையில் அவரை காணவில்லை என்றனர்.
எனவே அவர்தான் பாபுவை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் பாபு கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி-ஈஸ்வரி தம்பதியின் மகன்கள் கோகுல கண்ணன் (33) மற்றும் வினோத் குமார் (31). இருவரும் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தனர். வீட்டை விற்பது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு அண்ணன்-தம்பி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த தம்பி வினோத்தை, கோகுல கண்ணன் பலமாக தாக்கினார். இதில் வினோத் கீழே விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டார்.
நேற்று காலை கோகுல் கண்ணன், அவரது தாயார் ஈஸ்வரி இருவரும் சேர்ந்து வினோத்தை யாரோ அடித்துவிட்டார்கள். அவன் வீட்டில் வந்து இறந்து கிடக்கிறான் என அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடினர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி.நகர் போலீசார் நடத்திய விசாரணையில் அண்ணன்-தம்பி தகராறில் வினோத் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து கோகுல கண்ணன் மற்றும் உடந்தையாக இருந்த தாய் ஈஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.