பொதுச்சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது

பொதுச்சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது

Update: 2022-02-06 10:31 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொதுச்சுவர்களில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் போலீசார், வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து ெகாண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை அனைத்து கட்சியினரும் தட்டி, விளம்பர போர்டு எதுவும் வைக்கக் கூடாது. அனைத்து கட்சிகள் சார்பாகவும் காவல்துறையின் அனுமதியின் பேரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக நடத்தை விதிகளை கருத்தில்கொண்டு அனுமதி தற்காலிகமாக மறுக்கப்படுகிறது.
தேர்தல் பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரத்திற்கு அனுமதி வேண்டுவோர் அவினாசியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னர் காவல் துறையில் விண்ணப்பிக்க வேண்டும். கொரோனா நடத்தை விதிமுறைகளை கருத்தில்கொண்டு அரசால் பொதுக்கூட்டம் நடத்த தற்காலிக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
விளம்பரம் செய்யக்கூடாது
பொது இடம் மற்றும் சுவர்களில் உள்ள தங்களுடைய கட்சி சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் காவல்துறை சார்பில் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
பொதுச் சுவர்களில் கண்டிப்பாக எந்தவிதமான சுவர் விளம்பரம் மட்டும் பிரசாரம் செய்யக்கூடாது. தனியார் இடத்தில் சுவர் விளம்பரம் செய்யும் போது சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று அதற்கான ஒப்புதல் கடிதத்தை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்த பின்னரே விளம்பரம் செய்ய வேண்டும்.
கடும் நடவடிக்கை
 கட்சி சார்பாக அமைக்கப்படும் தேர்தல் பணிக்குழு அலுவலகங்களை வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு பிறகு அமைத்துக்கொள்ள வேண்டும். வாகனப் பிரசாரத்திற்கு கண்டிப்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். வீடுவீடாக சென்று பிரசாரம் செய்யும் வேட்பாளர்கள் தங்களுடன் ஒரு நபரை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். பிரசாரங்களையும் இரவு 9 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் பிரசாரம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 இவ்வாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்