நடிகர் விஜய்யை சந்தித்த விவகாரம் ரங்கசாமி மீது அ தி மு க விமர்சனம்

முதல்-அமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜய்யை சந்தித்த விவகாரத்தை அ.தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது.

Update: 2022-02-05 23:59 GMT
புதுச்சேரி
முதல்-அமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜய்யை சந்தித்த விவகாரத்தை அ.தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது.

கூட்டணி அரசு

புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. 4 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. தோல்வியை தழுவியது.
புதிய அரசு அமைந்த நிலையில் அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் பங்கு பெற்றுள்ளன. இதுவரை பதவியில்லாமல் இருக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் வாரிய தலைவர் பதவி பெற முதல்-அமைச்சர் ரங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.

வாரிய தலைவர் பதவி

இதேபோல் அ.தி.மு.க.வும் வாரிய தலைவர்கள் பதவியை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் வாரிய தலைவர்களை நியமிக்க முடியாது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரடியாக தெரிவித்துவிட்டார்.
இதனால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வாரிய தலைவர்கள் பதவிகளை பெறுவது தொடர்பாக தங்களது கட்சியின் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே பா.ஜ.க. அமைச்சரான சாய் சரவணன் குமார் சில பிரச்சினைகள் தொடர்பாக அரசு வழங்கிய புதிய காரை வேண்டாம் என்று கூறிவிட்டார். இந்த பிரச்சினைகள் புதுவை அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. விமர்சனம்

இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்னை சென்று நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று முதல்-அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை அ.தி.மு.க. தற்போது கடுமையாக விமர்சித்துள்ளது. அந்த கட்சியின் கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் சமூக வலைத்தளத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

நன்றி தெரிவிக்கக்கூட...

புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா? என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாநில மக்கள் வளர்ச்சி திட்டத்திற்காக பிரதமரை, மத்திய மந்திரிகளை சந்திக்க நேரம் இல்லை. அ.தி.மு.க. வாக்கை பெற்று முதல்-அமைச்சர் ஆனவருக்கு எங்கள் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவிக்கக்கூட வழி தெரியவில்லையா?, நடிகரை மட்டும் மரியாதை நிமித்தமாக சந்திக்க நேரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. முதல்-அமைச்சர் ரங்கசாமியை விமர்சித்து பேசியிருப்பது புதுவை அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க.வை தொடர்ந்து அ.தி.மு.க.வும் என்.ஆர்.காங்கிரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்