சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியார் நிறுவன ஊழியரிடம் திருடிய வாலிபர் கைது கழிவறையில் பதுங்கி இருந்த போது பிடிபட்டார்
சென்னை- மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியார் நிறுவன ஊழியரிடம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் கழிவறையில் பதுங்கி இருந்த போது பிடிபட்டார்.;
சூரமங்கலம்,
தனியார் நிறுவன ஊழியர்
சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 31). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கேரளாவில் உள்ள உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து பாலக்காட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 12601) எஸ்-9 பெட்டியில் பயணம் செய்தார். அந்த ரெயில் ஜோலார்பேட்டை அருகே வந்த போது அவரின் அருகில் அமர்ந்திருந்த ஒரு வாலிபர், சுபாஷ் தூங்கிக்கொண்டு இருந்த போது அவரின் பையை திருடிக்கொண்டு, கழிவறையில் ஒளிந்து கொண்டார். சுபாஷ் கண்விழித்து பார்த்தபோது தனது பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
கழிவறையில் பதுங்கி இருந்தார்
பின்னர் அங்குமிங்குமாக ரெயில் பெட்டி முழுவதுமாக தேடினார். கழிவறையை திறந்து தேட முயற்சி செய்தார். ஆனால் கழிவறையை திறக்க முடியவில்லை. இதையடுத்து ரெயில் பெட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் கழிவறை கதவின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தனர். அங்கு ஒரு வாலிபர் கையில் பையை வைத்துக்கொண்டு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காட்பாடி கரசமங்களம் பாரதி நகரை சேர்ந்த குணசேகரன் (27) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவர் கையிலிருந்த பையை பறிமுதல் செய்தனர். அந்த பையில் 6 பவுன் நகை மற்றும் ரூ.11 ஆயிரத்து 500 ரொக்கம், செல்போன் ஆகியவை சரியாக உள்ளதா? என போலீசார் பார்த்தனர்.
கைது
இதையடுத்து குணசேகரனை கைது செய்து சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.