சேலம் மாநகராட்சி 14-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் மனு நிராகரிப்பு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதம்

சொத்து, குடிநீர் வரியை செலுத்தவில்லை எனக்கூறி சேலம் மாநகராட்சி 14-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பாளர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-05 21:02 GMT
சேலம், 
வேட்புமனு பரிசீலனை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. அதன்படி சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் வேட்பாளர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை காலை 10 மணிக்கு தொடங்கியது.
அப்போது, 14-வது வார்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புவனேஸ்வரி சரிபார்த்தார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் அங்கு வந்திருந்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்
இதையடுத்து 14-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சாந்தமூர்த்தி தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் என்பவர், அ.தி.மு.க. வேட்பாளர் நடேசன் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளவர்களின் பெயரில் சொத்துவரி, குடிநீர் வரியை செலுத்தாமல் உள்ளதாக தெரிவித்து அவரது வேட்புமனு மீது ஆட்சேபனை தெரிவித்தார். 
அதாவது, சொத்து வரி ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 850-ம், குடிநீர் வரி ரூ.21 ஆயிரத்து 444-ம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார் என்றும், இதனால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனால் அ.தி.மு.க. வேட்பாளரின் மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு மற்ற மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதையடுத்து வேட்பாளர் நடேசன் அலுவலக வளாகத்தில் நீண்ட நேரம் காத்து கொண்டிருந்தார்.
வேட்புமனு நிராகரிப்பு
இதேபோல், 29-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சத்யாவின் கணவர் மீது கோர்ட்டில் வழக்கு உள்ளதாகவும், அது குறித்த விவரம் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை என்பதால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிரிஜா குமரேசன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் வேட்பாளர் சத்யாவும் வெளியில் காத்திருந்தார். 
அ.தி.மு.க.வை சேர்ந்த 2 வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அறிந்த தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புவனேஸ்வரியிடம் வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்று கேள்வி கேட்டார். 
அப்போது, 14-வது வார்டு வேட்பாளரின் மனைவி பெயரில் சொத்துவரி, குடிநீர் வரியை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதால் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வாக்குவாதம்
இதனால் ஆத்திரம் அடைந்த வேட்பாளர் நடேசன், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஆகியோர் தேர்தல் அதிகாரி புவனேஸ்வரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 
அப்போது, தனது பெயரில் உள்ள வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டி உள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களின் பெயரில் நிலுவையில் இருப்பதாக கூறினால் அதையும் உடனடியாக செலுத்த தயாராக இருப்பதாகவும் நடேசன் கூறினார். ஆனால் அதை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து நடேசனை அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
நடேசனுக்கு மாற்று வேட்பாளரான பழனிசாமி என்பவரின் மனு ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், 29-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சத்யாவின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி புவனேஸ்வரி தெரிவித்தார்.
கண்டிக்கத்தக்கது
அ.தி.மு.க. வேட்பாளர் நடேசன் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால் தி.மு.க.வினர் திட்டமிட்டு எனது மனுவை நிராகரிப்பு செய்துவிட்டனர். வேட்பாளர் பெயரில் எவ்வித கட்டணமும் நிலுவையில் இல்லை. அதற்கான சான்றிதழும் இணைத்துள்ளேன். ஆனால் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் சொத்து, குடிநீர் வரி நிலுவையில் உள்ளதாக கூறி எனது மனுவை நிராகரிப்பு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது, என்றார்.

மேலும் செய்திகள்