சேலம் மாவட்டத்தில் வேட்புமனு பரிசீலனையில் 78 பேரின் மனுக்கள் தள்ளுபடி

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் 78 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Update: 2022-02-05 21:02 GMT
சேலம்,
வேட்புமனு பரிசீலனை
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 699 பதவி இடங்களுக்கு, 4 ஆயிரத்து 416 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் பல்வேறு காரணங்களுக்காக 78 பேரின் மனுக்கள் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்படி, சேலம் மாநகராட்சியில் 16 பேர், ஆத்தூர் நகராட்சியில் 8 பேர், நரசிங்கபுரம், தாரமங்கலம் ஆகிய நகராட்சிகளில் தலா 2 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
பேரூராட்சிகள்
பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் 18 பேர், வீரக்கல்புதூர் பேரூராட்சியில் 6 பேர், கருப்பூர் பேரூராட்சியில் 4 பேர், அரசிராமணி, காடையாம்பட்டி, பி.என்.பட்டி ஆகிய பேரூராட்சிகளில் தலா 3 பேர், மல்லூர், பெத்தநாயக்கன்பாளையம், தம்மம்பட்டி, வாழப்பாடி ஆகிய பேரூராட்சிகளில் தலா 2 பேர், பேளூர், ஏத்தாப்பூர், இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், சங்ககிரி ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒருவரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
4 ஆயிரத்து 338 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுவை வாபஸ் பெற நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். அதன்பிறகு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் அறிவிக்கப்படும்.

மேலும் செய்திகள்