புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

புகார் பெட்டி

Update: 2022-02-05 20:48 GMT
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம் 
விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி ஊராட்சி வீர குடும்பன்பட்டியில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. அந்த மின்கம்பம் எப்போது சாய்ந்து விழும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டும். 
பரத்ராஜா, இனாம்ரெட்டியபட்டி. 

எரியாத தெருவிளக்குகள்
மதுரை தத்தனேரி ரெயில்வே சுரங்க பாதையில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்ல பெண்கள் அச்சம் அடைகின்றனர். சமூக விரோதிகள் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஜான்சன், மதுரை. 

நாய்கள் தொல்லை 
சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டி-பொன்னமராவதி நெடுஞ்சாலையில் உள்ள புழுதிபட்டி சத்திரம், மீனாட்சிபுரம், செட்டிகுறிச்சி, கே.புதுப்பட்டி, எஸ்.புதூர், உலகம்பட்டி ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சாலைகளின் குறுக்கே செல்கின்றன. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்களை சந்திக்க நேரிடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நடந்து செல்லும் பொதுமக்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. எனவே, பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த  வேண்டும். 
பொதுமக்கள், புழுதிபட்டி. 

மாசடைந்த கண்மாய் 
மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளநாதன்பட்டி கண்மாயில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் கண்மாய் துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீரும் மாசடையும் நிலை உள்ளது. கண்மாய் தற்போது மாசடைந்து காணப்படுகிறது. எனவே, கண்மாயில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். 
பொதுமக்கள், மேலூர். 

இருளில் மூழ்கும் பஸ் நிலையம் 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள மின்விளக்குகள் சில கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குமார், ராமேசுவரம். 

மோசமான சாலை 
மதுரை குரு தியேட்டர் சிக்னலில் இருந்து அண்ணா வீதி வரை உள்ள ்சாலையானது குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும். 
கண்ணன், மதுரை. 

பயணிகள் நிழற்குடை தேவை 
மதுரை பரவை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதன் காரணமாக இங்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் வெயிலில் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக முதியவர்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்படுகின்றனர். பயணிகள் நலன்கருதி இங்கு பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா? 
பாஸ்கரன், பரவை. 

========= 

மேலும் செய்திகள்