தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’க்கு பாராட்டு
சேலம் சின்னதிருப்பதியில் உள்ள புதிதாக அமைந்துள்ள மகாலட்சுமி கார்டன் பேஸ்-1 மற்றும் பேஸ்-2 குடியிருப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் தினமும் குப்பைகளை எடுத்துச் செல்லும் மாநகராட்சி குப்பை வண்டி வருவதில்லை என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. உடனே அந்த பகுதிக்கு தினமும் குப்பை வண்டி வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-திரிபுரசுந்தரி, மகாலட்சுமி கார்டன், சேலம்.
கால்வாய் சீரமைக்கப்படுமா?
தர்மபுரி நகரின் மையப்பகுதியில் ஓடும் சனத்குமார் நதி கால்வாய் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்த கால்வாயில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் கால்வாயில் பல இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. இந்த கால்வாயில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாைய சீரமைத்து கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கணேசன், தர்மபுரி.
பஸ் இயக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலைக்கு நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய ஊர்களிலிருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பஸ்கள் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட போக்குவரத்துறை அதிகாரிகள் அனைத்து நாட்களிலும் பஸ் இயக்கினால் பெரும் உதவியாக இருக்கும்.
-ரங்கராஜன், கபிலர்மலை, நாமக்கல்.
பன்றிகள் தொல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது முல்லை நகர், அக்ரஹாரம். இந்த பகுதிகளில் பன்றிகள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் செல்லும் போது சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் பன்றிகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், கிருஷ்ணகிரி.
வீணாகும் குடிநீர்
சேலம் அம்மாபேட்டை பழனிசெட்டி தெருவில் மாநகராட்சி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் வீணாக ஓடுகிறது. 4 மாதத்திற்கு மேல் இதே நிலைதான் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-ரவிச்சந்திரன், அம்மாபேட்டை, சேலம்.
சமுதாய கூடம் கட்ட வேண்டும்
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தேக்கம்பட்டி 10-வது வார்டு தே.கொல்லப்பட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த கிராமத்தில் சமுதாய கூடம் இல்லாததால் பொதுமக்கள் போதுமான வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அருந்ததியர் மக்கள் நலன் கருதி சமுதாய கூடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மா.இளங்கோவன், தேக்கம்பட்டி, சேலம்.
நோய் பரவும் அபாயம்
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பரமசிவகவுண்டர் தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் தெருவில் ஓடி தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரவணன், இலக்கியம்பட்டி, சேலம்.
சேலம் தாதகாப்பட்டி கேட், சஞ்சீவிராயன் பேட்டை அருகே மாரியம்மன் கோவில் தெருவில் 4 மாதங்களாக சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்துவிட்டது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை சீரமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், சஞ்சீவிராயன் பேட்டை, சேலம்.
ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை
சேலம் அங்கம்மாள் காலனி பார்வதிபுரம் பகுதியில் சாலை போடுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பழைய சாலையை பெயர்த்து போட்டுள்ளனர். பல மாதங்களாக ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படும் இந்த சாலையில் செல்ல வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும்.
- சின்னதம்பி, பார்வதிபுரம், சேலம்.
குப்பைகள் அள்ளப்படுமா?
சேலம் தாதம்பட்டி சூலைக்கார உடையார் தெரு ஏரிக்கரை செல்லும் வழியில் குப்பை தொட்டி இல்லை. இதனால் குப்பைகள் நிரம்பி சாலையை ஆக்கிரமித்து உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைதொட்டிவைத்து தினமும் அந்த பகுதியில் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-ஊர்மக்கள், தாதம்பட்டி, சேலம்.