போலீஸ் தேடிய அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கால் எலும்பு முறிவு

சாத்தூர் கூட்டத்தில் சர்ச்சையாக பேசியதால் வழக்குப்பதிவு செய்து போலீஸ் தேடிய அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Update: 2022-02-05 20:23 GMT
சாத்தூர், 
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சாத்தூர் நகர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 
இந்தநிலையில் அவரது வீட்டில்தான் சண்முகக்கனி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்றதாகவும், அப்போது அவர் அவசரம், அவசரமாக மாடியில் இருந்து இறங்கி வந்த போது கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  உடனே சண்முகக்கனியை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  ஆஸ்பத்திரிக்கு அவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் காட்சிகள், கால் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கான எக்ஸ்ரே படம் ஆகியவை சமூக வலைதளங்களில் பரவின. 
இதையடுத்து போலீசார் கோவில்பட்டி ஆஸ்பத்திரிக்கு விசாரணைக்காக சென்றனர். ஆனால், அதற்குள் சண்முகக்கனி அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையே சண்முகக்கனியை போலீசார் பிடிக்க சென்ற போது, அவர் மாடியில் இருந்து குதித்துவிட்டதாகவும் தகவல் பரவியது. 
அவ்வாறு நடக்கவில்லை என்று சண்முகக்கனி குடும்பத்தினரும், போலீசாரும் மறுத்தனர்.சாத்தூர் கூட்டத்தில் சர்ச்சையாக பேசியதால் வழக்குப்பதிவு செய்து போலீஸ் தேடிய அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்